
'இலங்கை தோற்று விட்டது'- சந்திரிகா
சந்திரிகா குமாரதுங்க
போரில் வெற்றியடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம் இனங்கிளுக்கிடையிலான சமாதானத்தை வென்றெடுப்பதில் தோல்வியடைந்து விட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக, சிறுபான்மை இன மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணர் ஞாபகார்த்த நிகழ்வில் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் எவ்வித அக்கறையும் இன்றி இருப்பதாகவும் சந்திரிகா கூறியிருக்கிறார்.
சானல் 4 வீடியோ
சந்திரிகா மற்றும் மகிந்த -2005 இல்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி சானல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட விவரணப் படத்தில் தெரியவந்த கொடூரங்களைப் பார்த்த பின்னர், தொலைபேசியில் பேசிய அவரது வெளிநாட்டிலுள்ள இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேம்பி அழுததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது உரையில் கூறியுள்ளார்.
அவரது மகன், தன்னை சிங்களவர் என்றோ இலங்கையர் என்றோ சொல்லிக் கொள்வதில் வெட்கமடைவதாக கூறியதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
சானல் 4 விவரணப்படத்தை போலியானது என்று இலங்கை அரசாங்கம் நிராகரித்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக இருந்துள்ள சந்திரிகா, தாம் தேசம் என்ற ரீதியில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இலங்கையர்கள் வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது தந்தை, பிரதமர் பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்த நடவடிக்கையையும் சந்திரிக்கா கடுமையாக விமர்சித்தார்.
அதுவே இனக்கலவரங்களை உருவாகவும் சிறுபான்மை சமூகங்கள் வெளியேறவும் போருக்கும் காரணமாகியது எனவும் சந்திரிகா சுட்டிக்காட்டினார்.
நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அமோக வெற்றியீட்டி, ஜனாதிபதி மகிந்தவின் ஆளும் கட்சி நாட்டின் மற்ற பாகங்களில் வெற்றியீட்டியுள்ளமை இலங்கையின் இனங்களுக்கிடையிலான
வேறுபாட்டை தெளிவாகப் புலப்படுத்தியுள்ள நிலையிலேயே முன்னாள் சந்திரிகாவின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க