
யானை- மனிதர் மோதலை தடுக்க நடவடிக்கை
யானைகள்-மனிதர்கள் மோதலைக் கட்டுப்படு்த்த நடவடிக்கை
இலங்கையில் யானைகள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் முகமாக ஆயிரக்கணக்கான சிவில் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுப்படுத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதலில் சுமார் 200 யானைகளும் 60 பொதுமக்களும் பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் யானைகளின் எண்ணிக்கையும் 4000 ஆக குறைந்துள்ளது.
இலங்கையில் பல பாகங்களில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருகிறது. மனிதர்கள் யானைகளின் இடங்களை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க இந்த மோதலும் அதிகரிப்பதாக வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகள் மனிதர்களை தாக்குவதோடு மட்டுமல்லாமல், பயிர்களையும் நாசப்படுத்தி விடுகின்றன. பெரும்பாலான விவசாயிகள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த மாதம் இராணுவத்தினரின் உதவியுடன் யானைகள் காட்டுக்குள் துரத்தப்பட்டன. மின்சார வேலிகள் போன்றவை வடக்கு இலங்கையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டன.
தற்போது இந்த நடவடிக்கை விஸ்திகரிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த பணியில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் எனவும் வனவிலங்குகள் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நாடாளுமன்றத்தில் கூறினார்.
மூவாயிரம் சிவில் பாதுகாப்பு படையினர் வனவிலங்கு துறையில் பயிற்சி பெறுவார்கள். இவர்கள் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையில் மோதம் இடம்பெறும் இடங்களில் பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள். நெல் வயல்களை பாதுகாக்கவும், யானைகளை பாதுகாக்கவும், மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுவதை தடுக்கவும் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர்கள் விரைவில் பணியை ஆரம்பிப்பார்கள். இந்த சிவில் பாதுகாப்பு படையினரால் யானைகள் மேலும் அதிகளவில் கொல்லப்படலாம் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சம் தெரிவித்தார்.
ஆனால் அவ்வாறு நடைபெறாது, ஏனென்றால் சிவில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி போன்றவை கொடுக்கபட மாட்டாது என்றும், யானைகளை பயமுறுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
சமீபத்தில் தான் இறுதிப்போர் இடம்பெற்ற இடத்தை வனவிலங்கு காப்பகமாக மாற்ற போவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் யானைகள் ஒர் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு அவ்வளவு சீக்கிரமாக செல்லாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க