Thursday, September 2, 2010


கிழக்கு இலங்கை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கவுள்ளதாக அதன் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான், நிருபமா ராவ்
கிழக்கு மாகாண சபை முதலவருடன் இந்திய வெளியுறவுச் செயலர்

கிழக்கு மாகாண சபையின் முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தத் தகவலை அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் போரினால் தங்களது வீடுகளை இழந்தவர்களுக்கு இந்த வீடுகள் அளிக்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இப்படியாகக் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடுகள் தரம் வாய்ந்ததாகவும், நீடித்து நிறகக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என தாம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் தெரிவித்துள்ளதாகவும் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியா போதிய நிதியுதவி வழங்கும் எனவும் திருகோணமலையில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தரப்பினருடனான இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக விதவைகளான பெண்களின் மறுவாழ்வுக்கு இந்தியா முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக உதவிகளை வழங்க வேண்டும் என தமது தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண முதல்வர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இந்திய வெளியுறவுச் செயலர் தம்முடன் விவாதித்ததாகவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுகிறார்.

,

No comments:

Post a Comment

பின்னூட்டமிட்டு செல்க