

சர்வதேச நாணய நிதியம்
பாகிஸ்தான்-ஐ.எம்.எஃப் பேச்சுவார்த்தை
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக பாக்கிஸ்தானின் மூத்த நிதித்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ள பெரும் வெள்ளப்பெருக்கிற்கு முன்னர், அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதி உதவி நிகழ்ச்சித் திட்டம் தொடார்பாக இவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
பாகிஸ்தானின் பொருளாதார மறுசீரமைப்புக்காக 11 பில்லியன் டாலர்கள் வரை கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இணங்கியிருந்தது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை உள்ளடங்கலாக அந்நாட்டின் பொருளாதார கொள்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த தொடர்ச்சியான மீளாய்வுகளுக்குட்பட்டு தவணையடிப்படையில் கடன் வழங்கும் ஐ.எம்.எஃப் இன் இந்த திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தொடங்கியிருந்தது.
ஆனால் அந்த வரவு செலவுத் திட்டத்தை தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் முற்றாக மாற்றியமைத்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
நாட்டின் விவசாய உற்பத்திகளின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. உதாரணத்திற்கு 25 வீதமான பருத்தி உற்பத்தி அழிக்கப்பட்டுவிட்டது.
பாகிஸ்தான் வெள்ளம்
இந்தப் பின்னணியில் அரசின் வரிவருமானத்திற்கும் பெரும் அடிவிழுந்துவிட்டது. அழிவுகளுக்கான மீள்நிர்மானம் மற்றும் இழப்பீட்டு செலவீனங்கள் வரவுசெலவு திட்டத்தின் பற்றாக்குறைத் தொகையை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
மீதமுள்ள தவணைக் கடனுதவிகளைப் பெறவேண்டுமானால், வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை தொடர்பில் குறைந்தளவு நிபந்தனையொன்றை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தை உடன்படச்செய்ய வேண்டிய நிலையில் பாகிஸ்தான் தற்போது உள்ளது.
பாகிஸ்தானை திக்குமுக்காடச் செய்துள்ள தற்போதைய பெரும்வெள்ளத்தைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு உதவத்தயாராக உள்ளதாக ஐ.எம்.எஃப். இன் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க