Monday, May 10, 2010


இலங்கை இராணுவம்

கிழக்கில் மேலும் படைமுகாம்கள்





இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கடற்படை மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், இது தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு நகருக்கு அண்மித்த டச் பார் மற்றும் வாகரைப் பிரதேசத்திலுள்ள பால்சேனையிலும் புதிதாக இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டிப்பளை பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலம் இராணுவ பயிற்சி முகாமொன்றிற்காக அடையாளம் காணப்பட்டிருப்பது பற்றி தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தான் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

''இலங்கை இராணுவம் எங்கும் முகாம் அமைக்கலாம்''

இதேவேளை இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, இலங்கை ஒரு தனியான நாடு எனவும் அந்த நாட்டில் எந்த இடத்திலும் பாதுகாப்புக்காக முகாம்களை அமைக்க படையினருக்கு கடமையுள்ளது எனவும் கூறினார்.

கிழக்கு மாகாணம் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்கவில்லை எனவும் 1990களில் படையினரிடம் இருந்த முகாம்களில் சில பின்னர் இழக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது இலங்கை இராணுவத்தினர் முற்றுமுழுதாக அந்தப் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பிரசாத் சமரசிங்க கூறினார்.

பொலிசாரும் இராணுவத்தினரும் தனியாரின் இடங்களில் முகாம்களை அமைக்கவில்லை எனவும், பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய பகுதிகளில் விசேடமாக கரையோர பகுதிகளிலேயே முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment

பின்னூட்டமிட்டு செல்க