
இராக்கிய சிறையில் கைதிகள்
இராக் சிறையில் கைதிகள் சித்ரவதை
இராக் தலைநகர் பாக்தாத்தின் இரகசிய சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுதல், பாலியல் பலாத்காரம் போன்ற சித்ரவதைகளை இவர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறையில் முன்பு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களிடம் பிபிசி பேசியபோது, இராக்கிய பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு வழிமுறை வகுத்து தங்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததை உறுதிசெய்துள்ளனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இக்கைதிகள் சொன்ன விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
முதானா இரகசிய தடுப்புக் காவல் மையம்
முதானா விமான தளத்தில் உள்ள இந்த இரகசிய தடுப்புக்காவல் மையம் தற்போது மூடப்பட்டுவிட்டது.
ஆனால் இந்த மாத முற்பகுதி வரையில் இந்த இடத்தில்தான் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு மிகக் கொடூரமான சித்ரவதைகளை மாதக்கணக்கில் அனுபவித்துவந்திருந்தனர்.
"எங்கள் தலையை பிளாஸ்டிக் பையால் மூடுவதிலிருந்து சித்ரவதைகள் ஆரம்பிக்கும். எங்கள் மேலே தண்ணீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவார்கள்" என்று இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார். தனது அடையாளத்தை வெளியில் சொல்ல அவர் பயப்படுகிறார்
இவருக்கு நடந்த விஷயங்களும் இந்த இடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேறு நாற்பது பேர் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள விஷயங்களும் நிரம்பவும் ஒத்துப்போகின்றன.
கொடூர சித்ரவதைகள்
எங்களில் சிலருக்கு ஆசன வாயில் குச்சியை ஏற்றியும், இரும்புக் குழாயைச் செலுத்தியும் சித்ரவதை செய்திருந்தார்கள். எங்களது பாலுறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சியிருந்தார்கள். நாங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வில்லை என்றால், எமது அம்மாவையும் உடன்பிறந்தவர்களையும் இழுத்து வந்து எம் கண் முன்னாலேயே கதறக் கதறக் கெடுப்போம் என்று சொல்வார்கள்.
முதானா மையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர்
இராக்கில் இரகசிய தடுப்புக் காவல் மையங்கள் உள்ளன என்பதையும், இராக்கின் சிறைகளில் சித்ரவதை பரவலாக நடந்துவருகிறது என்பதையும் இராக்கிய அரசாங்கம் வலிமையாக மறுக்கிறது.
ஆனால் முத்தானா தடுப்புக் காவல் மையத்தில் சித்ரவதை என்பது 'வழமையாகவும், வழிமுறை வகுக்கப்பட்டும்' நடந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.
இந்தச் இடத்திலிருந்த சுமார் முன்னூறு கைதிகள் தற்போது பாக்தாத்தின் வேறொரு சிறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். அங்கே அவர்கள் மேம்பட்ட விதத்தில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சதாம் உசைன் ஆட்சிக்காலத்தில் கொடூரமான சித்ரவதைகளுக்கு இராக்கின் இந்த சிறைகள் பெயர்போன விஷயங்களாக இருந்தன. ஆனால் அவரது ஆட்சி அகன்று ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட தற்போதைய நிலையிலும் இராக்கில் துஷ்பிரயோகங்கள் தொடருவதாகவே தெரிகிறது.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க