
கசாப்புக்கு தூக்கு தண்டனை
ந்தியாவில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியான முகமது அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை ரயில் நிலையம், நட்சத்திர ஒட்டல்கள், யூத வழிபாட்டு மையம் மற்றும் ஒரு மருத்துவமனையில் பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் மும்பை வந்த 10 பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதல்களில் 174 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் 9 பேர் படையினருடன் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் போலீசாரால் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டார்.
இந்தத் தூக்கு தண்டனை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று எனக் கூறும் பிபிசியின் மும்பை நிருபர், நீதிபதி தனது தீர்ப்பில் கசாப் இந்தியாவை தாக்க வேண்டும் என்று நோக்கில் இருந்ததால் அவர் மீது தயவு தாட்சண்யம் காட்ட முடியாது என்று கூறியதாக தெரிவிக்கிறார்.
இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொயிபா அமைப்பே காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியது. இதை முதலில் மறுத்த பாகிஸ்தான் பிறகு இந்த தாக்குதலுக்கான திட்டமிடலில் ஒரு பகுதி தனது நாட்டுக்குள் நடந்திருப்பதாக ஒத்துக் கொண்டது. இருந்தும் தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்த நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.
கசாபை ஒரு கொல்லும் இயந்திரம் என்றும் கொடுரத்தின் அவதாரம் என்று அரச தரப்பு வழக்கறிஞர்கள் வர்ணித்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் திருப்தி தெரிவித்தார். நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த கூட்டமும் இந்துஸ்தானுக்கு ஜெய் என்று கோஷமிட்டு தனது மகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தூக்கு தண்டனைகள் மிக அரிதாகவே நிறைவேற்றப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு நபர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக கசாப் மேல் முறையீடுகள் செய்ய முடியும். ஜனாதிபதியிடமும் அவர் கருணை மனு செய்ய முடியும். எனவே தண்டனை நிறைவேற்றப்பட பல ஆண்டுகள் பிடிக்கலாம்.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க