
சானியா-ஷொய்ப் திருமணம்
மணப்பெண்ணாக சானியா
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொய்ப் மாலிக்கை ஹைதராபாத்தில் மணம் முடித்துள்ளார்.
ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமண வைபவத்தை மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் முன்னின்று நடத்தி வைத்ததாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.
ஷொய்ப் மாலிக் வேறொரு பெண்ணை கடந்த வாரம் விவாகரத்து செய்திருந்ததன் பின்னர் இப்போது இத்திருமணம் நடந்துள்ளது.
இத்திருமணம் நடந்த விடுதிக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டு நட்சத்திரங்கள் இடையிலான காதலும், அவர்கள் கல்யாணம் தொடர்பான சர்ச்சையும் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டிருந்தன.
ஷொய்ப் சானியா திருமணத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷொய்ப் மாலிக்கின் முதல் மனைவி ஆயிஷா சித்தீகி, பொலிஸில் கொடுத்திருந்த புகார்களை அவர் வாபஸ் பெற்றதை அடுத்து, மாலிக்கிடம் இருந்து அவர் விவாகரத்து பெற்றிருந்தார்.
ஆயிஷா சித்தீகியை இணையத்தின் வழியாக சந்தித்ததாகவும், தொலைபேசியில் பேசி திருமணம் முடித்ததாகவும் முன்னதாக மாலிக் கூறியிருந்தார். தொலைபேசி வழியாக திருமணம் செய்துகொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆயிஷா சித்தீகி தனது புகைப்படம் என்று கூறி அனுப்பியிருந்த படங்கள் வேறொருவருடையது; ஆதலால் அவருடனான திருமணம் செல்லாது என ஷொய்ப் மாலிக் வாதிட்டிருந்தார்.
23 வயது சானியாவும் 28 வயது ஷொய்ப் மாலிக்கும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தனர்.
வேறொருவருடன் நிச்சயமாகியிருந்த சானியா இவ்வருட ஆரம்பத்தில் அதனை முறித்துக்கொண்டிருந்தார்.
திருமணத்திற்குப் பின்னர் இருவரும் துபாயில் வாழத் திட்டமிட்டுள்ளனர் என்றும், இருவரும் தத்தமது நாட்டையே விளையாட்டில் பிரதிநிதித்துவம் செய்வர் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க