>> Saturday, October 30, 2010




மூன்று மாதமாகத் தவிக்கும் வெள்ள அகதிகள்


பாகிஸ்தானின் ஐந்தில் ஒரு பகுதி வெள்ளத்தில்
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு அதனால் மூழ்கடிக்கப்பட்டு, 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், சுமார் 70 லட்சம் பேர் இன்னமும் தங்க இடமில்லாமல் அவதியுறுகிறார்கள்.
வாந்திபேதியும் மற்றும் போஷாக்கின்மையும் அங்கு பரவி வருகின்றன.

குளிர்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நிலைமை மேலும் மோசமான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கு கொடையாளிகளிகளின் உதவி உடனடியாகத் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.



பாகிஸ்தானின் தென்பகுதி மாகாணமான சிந்து மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் சென்று வந்த எமது செய்தியாளர் ''தமக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை'' என்று மக்கள் குறை கூறுவதாகக் கூறினார்.

பலர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட தமது குழந்தைகளுக்கு கொடுக்க உணவின்றி தவிக்கிறார்கள்.

இன்னமும் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. எப்போதாவது வரும்

உதவிகள் கூட அங்கு காத்துக்கிடக்கும் மக்களுக்கு போதுமானவையாக இல்லை.

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கூட மருத்துவமனைகளில் பார்க்க முடிகிறது.

தமது சொந்த அரசாங்கமும், சர்வதேச சமூகமும் தம்மை கைவிட்டு விட்டதாக மக்கள் புலம்புகிறார்கள்.

Read more...


தமிழோசை அலைவரிசை மாற்றம்


பிபிசி உலக சேவை
அக்டோபர் 31 ஆம் தேதி,2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தமிழோசை அலைவரிசைகளில் மாற்றம் இடம்பெறுகின்றது.

தமிழோசை நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை

41 மீட்டரில் 7600 கிலோ ஹேர்ட்ஸ்

31 மீட்டரில் 9605 கிலோ ஹேர்ட்ஸ்

25 மீட்டரில் 11965 கிலோ ஹேர்ட்ஸ்

49 மீட்டரில் 6135 கிலோ ஹேர்ட்ஸ்

ஆகிய சிற்றலை வரிசைகளிலும்

இலங்கை நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாகவும் கேட்கலாம்.

Read more...



'எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும்'


கர்நாடகா-வரைபடம்
கர்நாடக மாநிலத்தில் யெதியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அந்தக் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஏற்கனவே, இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது, இருவரும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாட்டுடன் தீர்ப்பளித்தார்கள்.

அதாவது, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கெஹர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும், இன்னொரு நீதிபதி என். குமார், செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

அதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அந்த வழக்கு அனுப்பப்பட்டது.

நீதிபதி வி.ஜி. சபாஹித், பாஜக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று முடிவெடுத்த நிலையில், பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என முடிவு செய்யப்பட்டது.

பாஜகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், அந்தக் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரும், யெதியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் அவர்கள் கடிதம் கொடுத்தனர்.


பாஜக ஆதரவு கூட்டம்(ஆவணப்படம்)
அதையடுத்து, ஆளுநரின் உத்தரவுப்படி, இம் மாதம் 11-ம் தேதி நம்பிக்கை வாக்குக் கோரினார் யெதியூரப்பா. கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், வாக்கெடுப்புக்கு சற்று முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சட்டப் பேரவைத் தலைவர் போபையா அறிவித்தார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
ஆனால், அது ஜனநாயக நடைமுறை அல்ல என்று கூறிய ஆளுநர் பரத்வாஜ், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி, 14-ம் தேதி நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில், 106க்கு 100 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

இதனிடையே, முதல் வாக்கெடுப்பின்போது, தங்களைத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, 16 எம்.எல்.ஏ.க்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 11 பாஜக எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும், 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும் விசாரிக்கப்பட்டது.

தற்போது, பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் 10-வது பிரிவின்படி, பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்னிந்தியாவில், முதலாவது பாஜக அரசான யெதியூரப்பா அரசுக்கு இது பெரும் ஊக்கமளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதுதொடர்பான தீர்ப்பு எப்படி இருந்தாலும், யெதியூரப்பா அரசுக்கு தற்போதைய நிலையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter